search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மாநகராட்சி"

    கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீயை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை மாநகராட்சியில் குவியும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று 2-வது நாளாக எரிய தொடங்கியது.

    இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென்று பரவியது. இதனால் விண்ணை தொடும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

    தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் ராஜாமணி இன்று காலை வெள்ளலூர் சென்று தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அவர் இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கு சென்று ஆய்வு செய்தார். இணை இயக்குனர் விஜய சேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் 9 மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    9 மாவட்டங்களில் இருந்து 50 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

    மேலும் சூலூரில் இருந்து ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்த வெள்ளலூர் குப்பை கிடங்கை கோவை மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோரும் பார்வையிட்டு பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
    கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர், சாலை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். முதல்- அமைச்சர் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்கிறது.

    எனவே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. #Plastic
    கோவை:

    தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முனைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதை போலவே பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை முழுமையாக செயலாக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.

    தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவையில் விற்பனை செய்யப்படும் ‘பயோ-பேக்குகள்’.

    பெங்களூரை சேர்ந்த ரிஜினோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிறுவன அதிபர் சிபி செல்வன் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மக்கும் தன்மையிலான இந்த பைகள் 3 மாதத்தல் மக்கி விடும். எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும் போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போல் இல்லாமல், இந்த பைகள் சாம்பலாகி விடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

    தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மற்றும் மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பை போலவே காணப்படும் இந்த பயோ பேக்கை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசினாலும், பொடி, பொடி துகள்களாகி சில நாட்களில் மக்கி விடும். மருந்து கடைகள், ஓட்டல், ஜவுளிகடைகள், தொழிற்சாலைகளில் பொருட்கள் பார்சல் செய்ய ஏராளமானோர் இதனை வாங்குகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோன்ற பைகள் போலியாக விற்கப்படுவதை தடுக்க இந்த பைகளில் கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அங்காடியில் இந்த பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் பல வகைகளில் பைகள் உள்ளன.

    தயாரிப்பு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த பைகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. பொதுமக்கள் இந்த பைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். எனவே தயாரிப்பு அதிகரிக்கும் போது விலை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plastic
    ×